கரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலால் முடங்கிப் போயுள்ள பொருளாதாரத்தை முடுக்கிவிடும் விதமாக மேலும் ரூ.1.5 லட்சம் கோடி கடனுதவி திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதில், கரோனா ஊரடங்கால் முடங்கிப் போன துறைகளை ஊக்குவிக்க ரூ.1.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:
கரோனா காலத்தில் தொழில் துறை களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டில் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் ரூ.3 லட் சம் கோடி வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது. தற்போது இதில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இதன்மூலம், இத்திட்டத்தின்கீழ் வழங்கப் படும் கடன் தொகை அளவு ரூ.4.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
மொத்தம் 8 துறைகளுக்கு இந்த கட னுதவி திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் மருத்துவ கட்டமைப்பு துறை உள்ளிட்ட 4 புதிய துறைகளும் அடங்கும். மொத்தம் ஒதுக்கப்பட்ட ரூ.1.5 லட்சம் கோடி தொகையில் கரோனா ஊரடங்கால் முடங்கிப் போன துறைகளை ஊக்குவிக்க ரூ.1.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவ கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி, பிற துறைகளுக்கான ஒதுக்கீடு ரூ.60 ஆயிரம் கோடி ஆகும்.
குழந்தைகள் நலன் மற்றும் பொது சுகா தாரத்துக்கு ரூ.23,220 கோடி ஒதுக்கப்பட்டுள் ளது. இது குறுகிய கால அவசர செலவினங் களை எதிர்கொள்வதற்காக பயன்படுத்தப் படும். கூடுதல் ஒதுக்கீடு மூலம் மருத்துவத் துறையில் ஐசியு படுக்கை வசதி, ஆக்சிஜன் உற்பத்தி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட பல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.
அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் இதுவரை 1.1 கோடி தொழில் நிறுவனங்களுக்கு 12 பொதுத் துறை வங்கிகள், 25 தனியார் வங்கிகள் மற்றும் 31 வங்கியல்லாத நிதி நிறுவனங் கள் (என்பிஎப்சி) மூலம் ரூ.2.69 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே உள்ள கடன் தொகையில் 20 சதவீதம் கடன் வழங்கப்படும். இந்த கடன் தொகைக்கு தவணை, வட்டி செலுத்த ஓராண்டு அவகாசம் அளிக்கப்படும். கடனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் 4 ஆண்டுகளாகும். இதன்மூலம் அவர்கள் தொழிலை தொடர்ந்து நடத்த வழி ஏற்படும். கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைவர்.
கரோனா வைரஸ் பரவலால் பெருமளவு முடங்கியுள்ள துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்று. வெளிநாட்டவர் வருகை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் 5 லட்சம் வெளிநாட் டவர்களுக்கு விசா கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதி 2022 மார்ச் 31 வரை அமலில் இருக்கும். குறுகிய கால பயணமாக இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இது பயனுள்ளதாக அமை யும். இதனால் அரசுக்கு ரூ.100 கோடி வரை விசா கட்டண இழப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல சுற்றுலாத் தொழிலில் ஈடுபட் டுள்ளவர்களுக்கு மூலதன கடன் அல்லது தனி நபர் கடன் வழங்கப்படும். கரோனா வால் பாதிக்கப்பட்ட இத்துறையைச் சேர்ந்த வர்களுக்கு தொழிலை மீண்டும் தொடர கடனுதவி அளிக்கப்படும். பதிவு பெற்ற 11 ஆயிரம் சுற்றுலா வழிகாட்டிகள் (கைடு), சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கும் இந்த கடனுதவி வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.10 லட்சமும், தனி நபர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.
மத்திய அரசின் சுயசார்பு திட்டம் (ஆத்ம நிர் பாரத்) கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தொழில் நிறுவனங்களில் பணிபுரி யும் பணியாளர்களுக்கான இபிஎப் தொகை உள்ளிட்டவற்றை மத்திய அரசு செலுத்தும். இதற்காக ரூ.22,810 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 58.50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை விரிவுபடுத்தப் படுகிறது. இதில் பதிவு செய்ய வரும் ஜூன் 30-ம் தேதி கடைசி நாளாகும்.
இயற்கை விவசாயம்
இதேபோல பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஒய்ஏஒய்) திட்டம், வரும் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
இத்திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த மே மாதத்தில் இத்திட்டம் மீண்டும் அமல் படுத்தப்பட்டது. இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டதால் அரசுக்கு கூடுதலாக ரூ.93,869 கோடி செலவாகும். இத்திட்டத்துக்கான மொத்த செலவுத் தொகை ரூ.2 லட்சத்து 27,841 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷ னுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.88 ஆயிரம் கோடிக்கு காப்பீட்டு வசதி வழங்கப்படும். கிராமப் பகுதிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வசதியை மேம்படுத்தும் வித மாக ரூ.19,041 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாரத் நெட் வசதி விரிவுபடுத் தப்படும். அனைத்து கிராம பஞ்சாயத்து களுக்கும் இந்த வசதியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உற்பத்தி ஊக்க சலுகை 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கரோனா வால் பாதிக்கப்பட்டுள்ள 8 துறைகளுக்கான இதுவரையான மொத்த ஒதுக்கீடு மட்டும் ரூ.6 லட்சத்து 28,993 கோடி ஆகும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.-பிடிஐ