உழவர் சந்தைகள் திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க காய்கறி, கீரை கட்டுகளை கையில் ஏந்தி வந்த தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர். படம்:எஸ்.குரு பிரசாத் 
Regional01

உழவர் சந்தைகளை திறக்க வலியுறுத்தி மனு :

செய்திப்பிரிவு

உழவர் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி, எடப்பாடி, மேட்டூர், இளம்பிள்ளை, ஆத்தூர், ஆட்டையாம்பட்டி, ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த மே மாத பிற்பகுதியில் உழவர் சந்தைகள் மூடப்பட்ட நிலையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகள் மாவட்டம் முழுவதும் வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், உழவர் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தங்கராஜ், இளைஞரணி தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கையில் காய்கறிகள், கீரைக்கட்டுகளுடன் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.

மனுவில், “தொற்றுப் பரவல் அதிகரித்ததால், சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மூடப்பட்டன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களில் உழவர் சந்தைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுபோல, சேலம் மாவட்டத்திலும் உழவர் சந்தைகளை திறக்க அனுமதியளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT