Regional01

7 வார இடைவெளிக்குப்பிறகு : ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கத் தொடங்கின :

செய்திப்பிரிவு

ஊரடங்கு தளர்வினைத் தொடர்ந்து, 7 வாரங்களுக்குப் பிறகு ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின.

ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, சோலார், அசோகபுரம், மொடக்குறிச்சி உட்பட மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விசைத்தறித் தொழிலில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், நாளொன்றுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் கிடங்குகளில் தேங்கின. தமிழகத்திலும் கரோனா ஊரடங்கு அமலானதால், விசைத்தறிகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், 7 வாரங்களுக்குப்பிறகு நேற்று விசைத்தறிகள் இயங்கத் தொடங்கின.

மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் விசைத்தறிகள், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் துணி உற்பத்தியைத் தொடங்கின. ஊரடங்கில் மேலும் தளர்வு அறிவிக்கப்பட்டு 100 சதவீதம் பணியாளர்கள் பணிபுரியும் சூழல் விரைவில் வர வேண்டும் எனத் தெரிவித்த விசைத்தறியாளர்கள், வெளிமாநிலங்களுக்கு துணிகளை அனுப்ப வாகனப்போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT