சேலம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்ததை தொடர்ந்து மின்சாரம் மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள் கடை, செல்போன் கடைகள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால், பொதுபோக்குவரத்தை தவிர வழக்கமான இயல்பு நிலை திரும்பியது.
சேலம் மாவட்டத்தில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், வியாபாரிகள் தங்கள் கடைகளை உற்சாகத்துடன் நேற்று திறந்தனர். இதனால், சேலம் மாவட்ட கடை வீதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு, இயல்பு நிலை காணப்பட்டது.
சாலைகளில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகரித்து இருந்தது. இதனிடையே, செல்போன் உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடைகள், பேன்ஸி ஸ்டோர் மொத்த விற்பனைக் கடைகள் உள்ளிட்டவை அதிகம் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வீரபாண்டியார் நகரில் நேற்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் திரண்டு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால், அப்பகுதி திருவிழாபோல களைகட்டியதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியப் போக்கை காட்டினர்.
இதனால், தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தளர்வுகளில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மக்களும், வியாபாரிகளும் கடைப்பிடிப்பதை அரசு அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.