அரசின் வழிகாட்டுதல்படி ஈரோடு மாவட்டத்தில் 40 பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 4.11 லட்சம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் போடப்படவில்லை.
இந்நிலையில், குழந்தைகளைப் பெற்றெடுத்து பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போட சில வழிமுறைகளை அரசு வெளியிட்டிருந்தது. அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் பாலூட்டும் தாய்மார்கள் 40 பேருக்கு இது வரை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பாலூட்டும் தாய்மார்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரி வித்தனர்.