பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம், காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை ஒவ்வொரு காலாண்டிலும் திறந்து, அறைகளின் பாதுகாப்பு தொடர்பாக பார்வையிட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பழுதடைந்த, பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இருப்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைய உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் கார்மேகம், நேற்று காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சிராஜூதீன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.