திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவி ஒருவருக்கு பாடப் புத்தகங்களை வழங்குகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.படம்: ஜி.ஞானவேல்முருகன் 
Regional02

அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்தே பெற்றோர் குழந்தைகளை சேர்க்கின்றனர் : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்

செய்திப்பிரிவு

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக் கப் பள்ளியில் நேற்று மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

அப்போது, பள்ளியில் 100-வது மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்து, மாணவ - மாணவிகளுக்கு பாடப் புத்தகங் களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வறுமை யால் அல்லாமல், அரசுப் பள்ளியில் படிப்பதைப் பெருமையாக அனைவரும் கருதுகின்றனர். நடப்பு ஆண்டில் சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்தும் மாணவ - மாணவிகள் அரசுப் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்துதான் பெற்றோர் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.

எனவே, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த என்னென்ன தேவையோ அதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திமுக அரசு செய்யும்.

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவ - மாணவிகளை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, ஆசிரியர் பற்றாக்குறையை களைவது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அரசுப் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறேன். இந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை முதல்வர் தலைமையில் ஜூலை 1-ம் தேதி நடைபெறும் பள்ளிக்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் அளிக்கவுள்ளேன்.

அரசுப் பள்ளிகளுக்குத் தேவை யான அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிறைவேற்றப்படும் என்றார்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஜெகநாதன், பாரதி விவேகானந்தன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், அருணாதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் அமைச்சர் ஆய்வு நடத்தினார்.

SCROLL FOR NEXT