சேலம் கந்தம்பட்டி கோனேரிக்கரைப் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக நேற்று காலை வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். படம்:எஸ்.குரு பிரசாத் 
Regional01

சேலம் கந்தம்பட்டி அருகே கரும்புத் தோட்டத்தில் - சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்படவில்லை : வன ஊழியர்கள் தொடர் கண்காணிப்புக்கு நடவடிக்கை

செய்திப்பிரிவு

சேலம் கந்தம்பட்டி அருகே கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைப் புகுந்ததாக கூறப்பட்ட தகவலை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வனத்துறை, தீயணைப்புத் துறை, காவல்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு எந்த விலங்கும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, அங்கு வன ஊழியர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் கந்தம்பட்டி அடுத்த கோனேரிக்கரை பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை சிறுத்தை ஒன்று நடமாடியதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண், கரும்புத் தோட்ட உரிமையாளர் தங்கவேலிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் முருகன், உதவி வனப் பாதுகாவலர் யோகேஸ்குமார் மீனா, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சின்னதம்பி மற்றும் வனத்துறை ஊழியர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு மீட்புப் படையினர், சூரமங்கலம் போலீஸார் அங்கு சென்று கரும்புத் தோட்டத்தில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

வெகுநேரம் தேடியும் சிறுத்தை சிக்காத நிலையில் இருள் சூழ்ந்ததால், தேடுதலை பகலில் தொடர முடிவு செய்தனர். மேலும், வனத்துறையினர் கரும்புத் தோட்டத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, “அப்பகுதி மக்கள் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும். குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம். ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளை வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் ஏதேனும் நடமாடுவதைக் கண்டால், தகவல் கொடுக்க வேண்டும்” என சேலம் ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை மீண்டும் வனத்துறை உள்ளிட்ட குழுவினர் கரும்புத் தோட்டத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சிறுத்தையை பிடிக்க பெரிய வலையும் கொண்டு வரப்பட்டது. ட்ரோன் கேமரா மூலம் தோட்டப் பகுதிகள் படம் பிடிக்கப்பட்டது. நீண்ட தேடுதலுக்கு பின்னர் அங்கு எந்த விலங்கும் இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் முருகன் கூறியதாவது:

கரும்புத் தோட்டத்தில் விலங்குகள் நடமாட்டம் ஏதும் கண்டறியப் படவில்லை. தோட்டத்தில் நாயின் கால் தடம் தான் இருந்தது. இருப்பினும் இப்பகுதியில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் அச்சமடைய தேவை யில்லை. விலங்கு நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT