ஈரோட்டில் சாலையோரம் கடை அமைக்க அனுமதி மறுத்ததால் காய்கறி வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஈரோடு வ.உ.சி. மைதானப் பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறிச்சந்தை, ஈரோடு பேருந்து நிலைய வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
பொதுமக்களுக்கு அந்தந்த பகுதிகளில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் காய்கறி வியாபாரம் செய்ய தடை விதித்த மாநகராட்சி கடை அமைத்தால் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் காய்கறி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வீரப்பன்சத்திரம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், வ.உ.சி. பூங்கா சாலை மற்றும் மல்லிகை அரங்கு பகுதியில் காய்கறிக்கடை அமைக்க அனுமதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.