கடலூர் மாவட்டத்தில் பெண்கள், முதியவர்கள் தெரிவித்த புகார்களுக்கு 24 மணி நேரத்தில் போலீஸார் தீர்வு கண்டுள்ளனர்.
கடலூர் எஸ்பி சக்திகணேசன் கடந்த 19-ம் தேதி பெண்கள், முதியோர்கள் புகார் தெரிவிக்க தனித்தனி உதவி எண்களை அறிமுகப்படுத்தினார். இதில், பெண்கள் புகார் தெரிவிக்க உள்ள உதவி எண் 8220006082-ல் இது வரை 54 புகார்கள் பதிவாகியிருந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தரப்பட்டது.
இதில் 9 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை(எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 10 புகார்களுக்கு சிஎஸ்ஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், வேப்பூர் பகுதியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 2 மூதாட்டிகள் உணவுக்கு கஷ்டப்படுவதாக தெரிவித்ததன் பேரில் காவல்துறை சார்பில் அவர்களுக்கு சாப்பாடு, அரிசி,காய்கறி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மேலும் கணவன், மனைவி பிரச்சினை, ரோட்டில் குடித்து விட்டு தொந்தரவு செய்தது உள்ளிட்ட புகார்கள் சம்பந்தமாக காவல் துறையினர் விரைந்து விசாரணை மேற்கொண்டு 24 மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.
முதியோர்கள் புகார் தெரிவிக்க உள்ள 8220009557 என்ற உதவி எண்ணில் 31 புகார்கள் பதிவாகி உள்ளது. இதில் 3 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை(எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 புகார்களுக்கு சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்கத்து வீட்டு வேலி பிரச்சினை, மகன் குடித்துவிட்டு வந்த பெற்றோரிடம் தகராறு செய்தல், ரோட்டில் குடித்துவிட்டு தொந்தரவு செய்தல் போன்ற புகார்கள் சம்பந்தமாக காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு 24 மணி நேரத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்கள், முதியோர்கள் புகார் தெரிவிக்க தனித்தனி உதவி எண்களை அறிமுகப்படுத்தினார்.