கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சேலம் மாவட்டத்தில் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு இன்று (28-ம் தேதி) முதல் ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பதிவு கட்டாயம் செய்திருக்க வேண்டும்.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் சில தளர்வுகளுடன் இன்று முதல் வரும் 5-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனியாக செயல்படும் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள், நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம். உணவகங்கள், பேக்கரிகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் விற்பனையில் ஈடுபடலாம். காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றின் மொத்த விற்பனை சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அரசின் அத்தியாவசிய சேவைத் துறைகள் 100 சதவீதம் பணியாளர்களுடனும், பிற துறைகள் 50 சதவீதம் பணியாளர்களுடனும் செயல்படலாம். அனைத்து தனியார் அலுவலகங்களும் 50 சதவீதம் பணியாளர் களுடன் செயல்படலாம். அத்தியாவசியப் பொருட்களுக்கான சரக்கு வாகனங்கள் இயக்கம் அனுமதிக்கப்படுகிறது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டயாம் இ-பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆட்டோக்கள், டாக்ஸிக்கள், ஷேர் ஆட்டோக்கள் இ- பதிவு நடைமுறையின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு மக்களுக்கு அனுமதி இல்லை.
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் திறப்பதற்கு அனுமதி கிடையாது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி அனைவரும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.