தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும், தொற்று பாதிப்பு அதிகமுள்ள முதல் வகை மாவட்டங்களில் சேலம் உள்ளது. எனவே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகள் மட்டும் வழங்கப்பட்டு, சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்றுப் பரவல் அச்சம் முழுமையாக விலகாதவரை, மக்கள்அனைவரும் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் நேற்று காய்கறிகள், இறைச்சி உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். சேலம் முதல் அக்ரஹாரம்சின்னக் கடை வீதியில், காய்கறிகள், பழங்களை வாங்க மக்கள் குவிந்தனர். அனைவரும் முகக் கவசம் அணிந்திருந் தாலும், சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை.
இதேபோல, சூரமங்கலம் மீன் சந்தையிலும் மக்கள் மீன் களை வாங்க குவிந்தனர். அங்கு மாநகராட்சி சார்பில் ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கை யுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். அலட்சியமாக செயல்படும் மக்கள் மீது மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.