Regional02

தூத்துக்குடியில் மனைவி உட்பட 3 பேர் மீது ஆசிட் வீச்சு : தப்பி ஓடிய மெக்கானிக்கை தேடும் போலீஸ்

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, அவரது ஆண் நண்பர் உட்பட 3 பேர் மீது ஆசிட் வீசிய மெக்கானிக்கை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அசோக் நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ரவி (50). இவர், தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி மாலா (49). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த சூசை மச்சாது (48) என்பவர் அடிக்கடி வந்து செல்வார். மேலும், பல்வேறு உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

இதனால் அவருக்கும், தனது மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக ரவி சந்தேகப்பட்டு இருவரிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரவியின் வீட்டில் மாலாவும், சூசை மச்சாதும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரவி, வாகனத்துக்கு பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் ஆசிட்டை இருவர் மீதும் வீசியுள்ளார்.

அந்நேரத்தில் அங்கு வந்த சூசை மச்சாதுவின் மகன் கெர்பின் (19) மீதும் ஆசிட்டை வீசி விட்டு ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி, தப்பியோடிய ரவியை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT