தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம் அரசு மருத்துவ மனைகளுக்கு 142 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அமைத்துக் கொடுத்துள்ளதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கரோனா சிகிச்சை பணிகளுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 70 ஆக்சிஜன் படுக்கைகள், 7,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 75 பெரிய ஆக்சிஜன் சிலி ண்டர்கள் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்களை ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வழங்கியுள்ளோம்.
இதுபோல் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் 30 படுக்கை வசதிகள் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு 10 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 32 ஆக்சிஜன் படுக்கைகள் என மொத்தம் 42 படுக்கைகள் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் ரூ.2 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூர், காயல்பட்டினம் அரசு மருத்துவ மனைகள், மாப்பிளையூரணி, புதுக்கோட்டை, கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மடத்தூர், கணேஷ் நகர், பாத்திமா நகர், திரேஸ்புரம், குரூஸ்புரம், தருவை சாலை மற்றும் முள்ளக்காடு ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய தேவையான உதவிகளை செய்துள்ளோம்.
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 26) வரை 1,217 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை 23 மாவட்டங்களுக்கு விநியோகம் செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.