கரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளில் இருந்து விரைந்து மீள தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு இணைந்து செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஆண்டுதோறும் ஜூன் 27-ம் தேதிகுறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. உலகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக 2017-ல் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி இத் தினம் கொண்டாடப்படுகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெருந்தொழில்களுக்கு துணையாக இருப்பதுடன் நாட்டின் உள்ளடக்கிய தொழில் வளர்ச்சிக்கும், சீரான வட்டார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கின்றன.
தமிழகம் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க மிகவும் உகந்தமாநிலமாக மட்டுமின்றி, வாகனஉதிரி பாகங்கள், இயந்திர தளவாடங்கள், மருந்து பொருட்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல்பொருட்கள் உள்ளிட்ட தொழில்களின் முக்கியதளமாக திகழ்கிறது.தமிழகத்தின் தொழில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுக்க பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மாறிவரும் பொருளாதார சூழல்உள்ளிட்ட எத்தகைய சவால்களையும், போட்டி சூழலையும் எதிர்கொள்ளும் வகையிலும், நீடித்தநிலையான வளர்ச்சியை பெறுவதற்கும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி முன்னோடி நடவடிக்கைகளை எடுக்கும் என்றுஉறுதியளிக்கிறேன்.
கரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளில் இருந்து விரைந்துமீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுடன் இந்த அரசு இணைந்து செயல்படும்.
இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.