உடுமலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையான அல்லது மழை நீரை மட்டுமே நம்பியிருக்கும் நிலத்தில் தேர்வு செய்யப்பட்ட மானாவாரி பயிர் சாகுபடி மேற்கொள்வது வழக்கம். 3.77 லட்சம் ஏக்கர் பிஏபி பாசனத்தில் உள்ளது. அந்த எண்ணிக்கைக்கு சற்றும் குறைவில்லாமல் பிஏபி-யில் பாசனம் பெறாத நிலங்களும் அடங்கும். இவ்வாறான நிலங்களின் உரிமையாளர்களுக்கு மழை நீரும், நிலத்தடி நீர்மட்டமும் தான் பிரதானம். அதனால் தான் குறுகிய கால பயிர் சாகுபடியை தேர்வு செய்கின்றனர். மேட்டுக்காடு, கல்லாங்காடு வகை நிலத்தில் பருவமழைக் காலங்களில்தான் சாகுபடி செய்ய முடிகிறது. இவ்வகை நிலத்தில் பருத்தி, எள், முருங்கை, சில வகை காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மானாவாரி சாகுபடியில் ஈடுபடும் விவசாயி கள் கூறும்போது, "பிற விவசாயிகளைபோல எங்களது நிலைமை இல்லை. இயற்கை சில சமயங்களில் காய்ந்து கெடுக்கும் அல்லது பெய்து கெடுக்கும். மழைக்காலங்களில் நீரை சேமிக்க எந்த அடிப்படை திட்டமும் இல்லை.
தற்போதைய சூழலில் உடுமலையை அடுத்த அந்தியூர், பூலாங்கிணர், கணபதிபாளையம், பொன்னாலம்மன் சோலை, ஈசல் தட்டு, குடிமங்கலம் வட்டாரத்தில் புக்குளம், பெதப்பம்பட்டி சுற்றுவட்டாரக் கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பில் மானாவாரியாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது" என்றனர்.