கரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், ஊரடங்கை பொருட்படுத்தாமல் மக்கள் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இவர்களை காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 285 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.
ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 252 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 222 இருசக்கர வாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன்படி நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதுபோல் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விதிமுறை மீறி திறக்கப்பட்ட 2 நகைக்கடைகளுக்கு தலா ரூ.5,000 வீதம் அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.