ஆத்தூர் அருகே வாகனச் சோதனையின்போது, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை சேலம் ஆட்சியர் வழங்கினார்.
ஆத்தூர் அடுத்த பெத்த நாயக்கன்பாளையத்தை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் கடந்த 22-ம் தேதி நடந்த வாகனத் தணிக்கையின்போது, போலீஸாருக்கும், போதையில் இருந்த விவசாயி முருகேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, முருகேசனை, சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி பிரம்பால் தாக்கினார். இதில், படுகாயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெரியசாமியை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முருகேசனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து நேற்று சேலம் ஆட்சியர் கார்மேகம், எடையப்பட்டி அடுத்த வில்வனூரில் உள்ள முருகேசனின் மனைவி அன்னக்கிளி, அவரது மகள்கள் ஜெயப்பிரியா, ஜெயப்பிரதா, மகன் கவிப்பிரியன் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முருகேசனின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், முருகேசனின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் (பொ) வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.