பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளைத் தீர்க்க திருச்சி மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், 2 காவலர்களைக் கொண்ட உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள போலீஸாருக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு சுப்பிரமணியபுரத்திலுள்ள ஆயுதப்படை மாங்கல்ய திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி பா.மூர்த்தி முன்னிலை வகித்தார்.
திருச்சி சரக டிஐஜி ராதிகா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உதவி மையத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, ‘‘பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி எண் 181-க்கு வரக்கூடிய அழைப்புகளின் மீது போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புகார் வரப்பெற்றதும் போலீஸார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் இருப்பிடம் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதில் பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்று காவல் உதவி மைய போலீஸாருக்கு பயிற்சி அளித்தனர். 15 காவல் நிலை யங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி மையத்துக்காக பிரத்யேக இருசக்கர வாகனங்கள், மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.