கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியில் மெடிக்கல் வைத்திருப்பவர் செந்தில்(44). பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து குளித்தலை மருத்துவ அலுவலர் சுதர்சனயேசுதாஸ் நச்சலூரில் உள்ள செந்திலின் வீட்டில் நேற்று ஆய்வு நடத்தியதில் அங்கு ஸ்டெதஸ்கோப், சிரிஞ்ச் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுதர்சனயேசுதாஸ் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.