நாகை ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் அறிவுறுத்தினார்.
நாகை ஒன்றியம் ஒரத்தூரில், 60.4 ஏக்கரில் ரூ.366.85 கோடி மதிப்பில் ஆண்டுக்கு 150 மாணவ, மாணவிகள் படிக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், ரூ.123.05 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ.119.03 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, ரூ.124.77 கோடி மதிப்பில் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் என மொத்தம் 24 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளை ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, கட்டிடங்களை தரமானதாக கட்டி முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், கடந்த ஆண்டு ஜூனில் கட்டுமானப் பணி தொடங்கிய நிலையில், வரும் டிசம்பருக்கு கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர்கள் பாலரவிக்குமார், முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.