கரோனா 2-வது அலை குறைந்து வருவதால் நாளை முதல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து களை 50 சதவீத பயணிகளுடன் இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகளில் பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. வண்ணார் பேட்டை தாமிரபரணி பணி மனையில் இருந்து 60 பேருந்து கள் இயக்கப்படவுள்ளன. பேருந்துகளில் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், 50 சதவீத பயணிகள் மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணித்தோட்டம் உட்பட 12 போக்குவரத்து கழக பணிமனைகளில் ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த 785 பேருந்துகளையும் சீரமைத்து அவற்றை போக்குவரத்துக்கு தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.