நிறுத்தப்பட்ட ரயில்களை உடனடியாக இயக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியிலிருந்து செல்லும் கோவை இணைப்பு விரைவு ரயில், குருவாயூர் இணைப்பு விரைவு ரயில், திருநெல்வேலி - தூத்துக்குடி, தூத்துக்குடி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் கரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால், தூத்துக்குடியில் இருந்து ரயில்களை இயக்குவதற்கு எந்தஅறிவிப்பும் வரவில்லை. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க வலியுறுத்தி தூத்துக்குடி ரயில் நிலையம் முன் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆர்.பேச்சிமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல், மாவட்ட நிர்வாகிகள் டென்சிங், அப்பாதுரை, மாரியப்பன் மற்றும் டிஆர்இயூ நிர்வாகிகள் குரூஸ் அந்தோணி, தளவாய் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.