Regional01

ஈரோடு அரசு இசைப்பள்ளியில் 28-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வரும் 28-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் என 7 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மூன்றாண்டு கால சான்றிதழ் படிப்பான இவ்வகுப்பில், 12 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் சேரலாம்.

குரலிசை, பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளுக்கு சேர்க்கைபெற குறைந்த பட்சம் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய பாடங்களுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் மட்டும் போதுமானது. ஆண்டுக்கு ரூ.150 பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.400 வீதம் வழங்கப்படும். இலவச பயணச் சலுகை பெறலாம்.

தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். வெளியூர் மாணவர்களுக்கு அரசினர் விடுதியில் தங்கிப் பயில வழிவகை செய்து கொடுக்கப்படும்.

இசைப்பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள் ‘தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பிராமண பெரிய அக்ரஹாரம், பவானி ரோடு ஈரோடு-05” என்ற முகவரியில் நேரிலோ, 0424-2294365, 94435 32934 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT