Regional01

கள்ளக்குறிச்சி அருகே - 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச் சென்ற 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் இளையனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி சங்கீதா(22) கர்ப்பமான நிலையில், வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸில் சங்கீதா மற்றும் அவரது உறவினர்களான ரோஸ், வசந்தி மற்றும் சுகாதாரப் பணியாளர் அமுதவள்ளி ஆகியோர் சென்றனர்.

அப்போது ஆம்புலன்ஸ் ரோடு மாமந்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ரோஸ், வசந்தி மற்றும் அமுதவள்ளி ஆகியோர் காயமடைந்தனர். ஓட்டுநர் சரத்குமார் மற்றும் கர்ப்பிணி பெண் சங்கீதா காயமின்றி தப்பினர்.

பின்னர் மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்துத் தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த 15 தினங்களுக்கு முன் இதேபோன்று கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச் சென்ற 108 ஆம்புலன்ஸ் கள்ளக்குறிச்சி அருகே விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT