Regional01

சம்பளம், பணி நிரந்தரம் உள்ளிட்ட - கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் முதல்வருக்கு மனு :

செய்திப்பிரிவு

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

மருத்துவத்துறையில் அவுட்சோர்சிங் முறை முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் இதர பணியாளர்களைப் போல மருத்துவப் பணியாளர்களும் நேரடியாக அரசின் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் அறிவிப்பினை வரவேற்கிறோம்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் ஏஜென்சி மூலம் பணியாட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவுட்சோர்சிங் பணியாளர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை விடக் குறைவாக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதையும் அந்த நிறுவனங்கள் முறையாக வழங்குவதில்லை. சட்டப்பூர்வமான நலன்களைக்கூட பணியாளர்களுக்கு வழங்கு வதில்லை.

எனவே, ஏஜென்சி நியமனத்தை ரத்துசெய்து, அவுட்சோர்சிங் முறையில் தற்போது பணிபுரிந்துவரும் அனைவரையும், அந்தந்த நிறுவனத்தில் நேரடிப் பணியாளர்களாக்கி, தகுதியான அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும்.

மேலும், மருத்துவத்துறை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்துறையில் செயல்படும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 200 தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, அப்போதைய ஈரோடு ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் ஓராண்டாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி, சந்தா, தொழிலாளர் ஈட்டுறுதி திட்ட சந்தா, தொழில் வரி தொகைகளை அந்த நிறுவனம் இதுவரை அரசுக்கு செலுத்தவில்லை. இவற்றை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT