சாத்தான்குளம் ஆர்.சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் (56). இவர், கருமேனி ஆற்றுப்படுகையில் உள்ள தோட்டத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். அவரது மனைவி லட்சுமி, மகன் அழகுமுத்து ஆகியோர் தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்து பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று வேகமாக வீசிய காற்றின் மூலம் மின்கசிவு ஏற்பட்டு கோழிப்பண்ணையில் தீப்பிடித்துள்ளது. இதை பார்த்த லட்சுமியும், அழகுமுத்துவும் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. கோழிப் பண்ணை முழுவதும் தீ வேகமாகப் பரவியது. தகவல் அறிந்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரிமுத்து தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தீவிபத்தில் பண்ணையில் இருந்த 6 ஆயிரம் கோழிக் குஞ்சுகளும் கருகின. சம்பவ இடத்தை சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளர் மஞ்சரி, கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் மேரி ஆகியோர் பார்வையிட்டனர். தீக்காயமடைந்த அழகுமுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.