திருநெல்வேலி டவுனில் உள்ள ரேஷன் கடையில் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி டவுன் தெற்கு ரத வீதியிலுள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் 41 மற்றும் 42-வது வார்டுக்கு உட்பட்ட 450 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். கரோனா நிவாரண தொகையாக ரூ. 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 5 நாட்களாக மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதால்,
ரேஷன் கடை முன் பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்துக்குப்பின் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.