குறிஞ்சிப்பாடி அருகே வழுதலாம்பட்டு பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். 
Regional01

குறிஞ்சிப்பாடி பகுதியில் - ஊரக வளர்ச்சித்துறை பணிகளை ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வழுதலாம்பட்டு பகுதியில் பசுமை வீடுகள் திட்டம் 2019-20 கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட பின்னர் ஆட்சியர் கூறுகையில், “இத்திட்டத்திற்கு அரசின் மூலம் ரூ. 2.10 லட்சம் கட்டுமான பணிகளுக்கு வழங்கப்படுகிறது. பழங்குடியினர் மக்களுக்கு, பழங்குடியினர் நலத்துறை சார்பில் இத்திட்டத்தின் மூலம் வீடு கட்டும் பயனாளிக்கு கட்டுமான பணிகளுக்காக மேலும் ரூ.90 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அகரம் பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக் கப்பட்டுள்ளதையும், அதற்கான குடிநீர் குழாய்கள் பதித்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் தீர்த்தனகிரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மேட்டுவெளி வாய்க்கால் தூரிவாரி கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், செயற்பொறியாளர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT