உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் அனைத்து துறை அலுவலர்களுடன் செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் ஆலோசனை மேற்கொண்டார். 
Regional02

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் - 13,559 மனுக்கள் மீது ஜூன் 28-க்குள் தீர்வு : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

செய்திப்பிரிவு

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட 13,559 மனுக்கள் மீது வரும் 28-ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டுமென செங்கை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,559 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இம்மனுக்கள் மீது துறை அலுவலர்கள் நேரில் கள ஆய்வு செய்து தகுதியான மனுக்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர், பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடையவர்களுக்கு அனைத்து வகையான அரசு நலத்திட்ட உதவிகளையும் சீரிய முறையில் உடனடியாக வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை முழு வீச்சில் ஆராய்ந்து தகுதியான பயனாளிகளின் கோரிக்கையை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வரும் 28-ம் தேதிக்குள் அனைத்து மனுக்கள் மீது தீர்வு காணப்பட வேண்டுமென அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட திட்ட இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT