Regional01

கடலூர் மாவட்டத்தில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் - தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியரிடம் முறையீடு

செய்திப்பிரிவு

அதிக அளவில் கல்விக் கட்டணம்வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாதவன் மனு அனுப்பி உள்ளார்.அம்மனு வில் கூறியிருப்பது:

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் நிலை உள்ளது. ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை பள்ளியின் தகவல் பலகையில் பெரிதாக மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

2021-22 கல்வி ஆண்டுக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடந்தாண்டு நிலுவை கல்விக் கட்டணத்தை கட்டினால் தான் தேர்ச்சி போடுவோம் என பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் மிரட்டும் நிலை உள்ளது.

பல தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. அரசு அறிவிப்புகள் வருவதற்கு முன்பாகவே அதாவது ஒரு மாத காலத்திற்கு முன்பாக பிளஸ் 1 பள்ளி சேர்க்கையை பல தனியார் பள்ளிகள் முடித்து விட்டார்கள்.

சில அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் அமைப்பின் பெயரில் நன்கொடை கேட்கும் நிலை உள்ளது.

இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் குறித்த நெறி முறைகள் முறையாக பின்பற் றப்படுகின்றனவா என்பதனையும் உறுதிப்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT