ஈரோட்டில் 40 நாட்களுக்குப் பிறகு மஞ்சள் ஏலம் தொடங்கியது
ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு, கோபி கூட்டுறவு சங்கங்களின் சார்பில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடந்து வந்தது. கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மே மாதம் 7-ம் தேதிக்குப்பின்னர் மஞ்சள் ஏலம் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் மஞ்சள் ஏலம் தொடங்கியுள்ளது.
ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
ஈரோட்டில் தற்போது மஞ்சள் நடவுப்பணி நடப்பதால், விவசாயிகள் தங்களிடம் உள்ள மஞ்சளை விற்று அதனை வேளாண் செலவுகளூக்கு பயன்படுத்த உதவும் வகையில், தற்போது மஞ்சள் ஏலம் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் மஞ்சள் ஏலம் கடந்த சில நாட்களாக நடக்கிறது.
ஊரடங்குக்கு முன்னர் ஒரு குவிண்டால் மஞ்சள் 6 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. தற்போது 500 ரூபாய் கூடுதலாக விற்பனையாகிறது. வரும் நாட்களில் புதிய மஞ்சள் நடவு, ஏற்றுமதி உள்ளூர் விற்பனைக்காக மஞ்சள் கொள்முதல் போன்றவற்றுக்கு ஏற்ப விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தின் போது, மஞ்சள் மாதிரிகளைப் பார்வையிடும் வணிகர்கள்.