உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடங்களை ஆட்சியர் கவிதா ராமு நேற்று ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு உத்தரவிடப்பட்டது.
அதில், ஒரு சில கிராமங்களில் ஏற்கெனவே இருந்த இடத்தில் அல்லாமல் புதிய இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இவ்வாறு, ஒரே ஊரில் இருவேறு இடங்களில் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால் கொள்முதல் நிலையம் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதில், கறம்பக்குடி வட்டம் அம்புக்கோவில், இலைகடிவிடுதி ஆகிய கிராமங்களில் இருந்து ஒரு தரப்பினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இரு வேறு வழக்குகளிலும், ‘ஆட்சியர் தேர்வு செய்து கொடுக்கும் தனிநபருக்கு அல்லாத பொது இடங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்’ என நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து, அம்புக்கோவில், இலைகடிவிடுதி ஆகிய கிராமங்களில் 2-க்கும் மேற்பட்ட இடங்களை ஆட்சியர் கவிதா ராமு நேற்று ஆய்வு செய்தார்.
அங்கு, திறந்த வெளியில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மூட்டைகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வட் டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.