திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த் தலையில் கடந்த மார்ச் 23-ம் தேதி முசிறியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் வந்த காரிலிருந்து ரூ.2 கோடியை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து பேட்டைவாய்த்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பணத்துடன் தலை மறைவான பிரபல ரவுடி சாமி ரவியை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் சாமி ரவியை தனிப்படையினர் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1.65 கோடி, கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சாமி ரவி உள்ளிட்டோரை கைது செய்த ஜீயபுரம் டிஎஸ்பி பி.கே.செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையில் இருந்த இன்ஸ் பெக்டர்கள் மாதையன், பன்னீர்செல்வம், சப் இன்ஸ்பெக் டர்கள் பிரபு, அருண் குமார், காவலர்கள் குமரேசன், அன்பரசு, பாலசுப்பிரமணியன், சத்தியமூர்த்தி, பிரபாகரன் ஆகியோரை மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அதேபோல, எஸ்.பி பா.மூர்த்தியும் தனிப்படை போலீஸாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.