Regional02

தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

தீப்பெட்டி மீதான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீப்பெட்டிக்கான மூலப்பொருட் கள் விலை உயர்ந்துவிட்டது. ஜி.எஸ்.டி. வரியும் அதிகமாக உள்ளது. ஆனால், 40 தீக்குச்சிகள் கொண்ட தீப்பெட்டி இந்தியா முழுவதும் ஒரு ரூபாய்க்குதான் விற்கப்படுகிறது.

இதுகுறித்து, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறியதாவது:

தீப்பெட்டிக்கு தேவையான அட்டை, குச்சி, பேப்பர் உள்ளிட்ட பல மூலப்பொருட்களுக்கு 12 சதவீதமும், மெழுகு, பொட்டாஷியம் குளோரேட் ஆகியவற்றுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. தீப்பெட்டியின் அடக்க செலவில் 4-ல் ஒரு பங்கு, தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. லாரி வாடகை, மின் கட்டணம் மற்றும் கூலி உயர்வு ஆகியவற்றால் உற்பத்தியாளர்கள் தத்தளிக்கிறோம். அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் தீப்பெட்டி இருப்பதை கருத்தில்கொண்டு, தீப்பெட்டி தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகைய வலியுறுத்தி தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம் மனு வழங்கி உள்ளோம்.

மேலும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தீப்பெட்டி தொழில் வாரியம் இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. வாரியம் அமைக்கப்பட்டால், தீப்பெட்டி தொழிலில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை அதன் மூலமே தீர்த்துக்கொள்ளலாம்.

கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தொடர் பாதிப்பு எதிர் கொண்டு வரும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு, அவர்கள் வங்கிகளில் இருந்த பெற்ற கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி, உதவித்தொகை வழங்க வேண்டும், என்றார் அவர்.

SCROLL FOR NEXT