தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58)இவரது மகன் பென்னிக்ஸ் (31)ஆகியோர், கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி ஊரடங்கின்போது கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டனர். இதில், கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் 22-ம் தேதி இறந்தனர்.
இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் தர், 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கரோனாவால் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை இறந்தார்.
இச்சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கடை முன்பு அவர்களது உருவப் படங்களுக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார், வர்த்தக சங்கத்தினர், கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து எம்பி, எம்எல்ஏ, ஆட்சியர் உள்ளிட்டோர் ஜெயராஜ் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர், கனிமொழி எம்பி கூறியதாவது:
இந்த வழக்கில் எதிரிகள், வழக்கை கேரளாவுக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு நிச்சயம் வழி வகுக்கும் என்றார்.