ஒற்றை நாற்று நடவு முறை மூலம் 30 சதவீதம் வரை கூடுதலாக நெல் மகசூல் கிடைக்கும், என கோபி வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வே.ஜீவதயாளன் கூறியதாவது:
நெல்லில் அதிக மகசூல் பெற, அந்தந்தப் பருவங்களுக்கேற்ற ரகங்களைத் தேர்வு செய்து பயிரிட வேண்டும். நவரை (ஜனவரி- ஜுன்), சொர்ணவாரி (ஏப்ரல் - செப்டம்பர்), கார் (மே-அக்டோபர்), குறுவை (ஜுன்- அக்டோபர்), முன்சம்பா (ஜூலை - பிப்ரவரி), பின்சம்பா அல்லது தாளடி அல்லது பிசாணம் (செப்டம்பர் - பிப்ரவரி), பிந்திய தாளடி (அக்டோபர் - மார்ச்) - ஆகிய பருவங்களில் பல்வேறு மாவட்டங்களில் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனி ரகங்கள் மாவட்ட வாரியாகப் பரிந்துரை செய்யப்படுகிறது.
ஒற்றை நாற்று நடவு சாதாரண நடவு முறையைவிட ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ மட்டுமே விதை நெல் தேவைப்படும். ஒற்றை நாற்று நடவு முறை மூலம் 30 சதவீதம் வரை அதிக மகசூல் கிடைத்துள்ளது. ஆராய்ச்சிகளிலும், விவசாயிகளின் அனுபவங்களிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போதை பட்டத்திற்கு ஏ.எஸ்டி-16, ஏடிடீ-37, டிபிஎஸ்-5, ஏடிடீ(ஆர்)-45 போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடிக்கு 3 கிலோவும் சாதாரண முறைக்கு, ஏக்கருக்கு 20-கிலோவும் போதுமானதாகும். அரசு சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.
பொதுவாக நெல் சாகுபடி செய்யப்படும் நிலங்களில், துத்தநாகச் சத்துப் பற்றாக்குறை பரவலாகக் காணப்படுகிறது. இதனால் 20 சதவீதம் வரை நெல் மகசூல் குறைகிறது. இதைத் தவிர்க்க நடவு வயலில் பரம்பு அடித்து சமப்படுத்தியவுடன் நடவுக்கு முன்பாக ஏக்கருக்கு 12-கிலோ ஜிங் சல்பேட்” - உரத்தை மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும்.
அடி உரம் மற்றும் மேலுரம் இடும்போது யூரியாவுடன் அதன் எடையில் 5-ல் ஒரு பங்கு வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் வைத்திருந்து இடுவதால் தழைச்சத்து வீணாவது தடுக்கப்படுகிறது.
நெல்லுக்கு அடியுரமாக 25 சதவீதம் தழைச்சத்தும், மேலுரமாக 3-4 முறை அதே அளவு சமமாக தழைச்சத்தை பிரித்தும் இடவேண்டும். பொதுவாக அடியுரமானது கடைசி உழவில் அல்லது நடவுக்கு முன்பாக இடவேண்டும். மணிச்சத்தை அடியுரமாக மட்டுமே இடவேண்டும். சாம்பல் சத்தை 25-சதவீதம் அடியுரமாகவும், மீதியை 3-4 முறையாகப் பிரித்து உரத்துடன் சேர்த்து இடவேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.