Regional01

தனியார் மருத்துவமனைகள் - அங்கீகாரம் இல்லாமல் கரோனா சிகிச்சை அளித்தால் நடவடிக்கை : ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கவும், கண்காணிக்கவும் அனைத்து வட்டாரங்களிலும் துணை ஆட்சியர் நிலை அதிகாரி தலைமையில் செயலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையினை அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து தனியார் மருத்துவமனைகள், சிடி ஸ்கேன் மையங்கள் மற்றும் ஆய்வகத்தினர் காய்ச்சல் மற்றும் இதர கரோனா தொற்று அறிகுறிகளுடன் பரிசோதனைக்காக வரும் நபர்களின் முழு விவரத்தையும் சேகரித்து தினசரி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கையாக அளிக்க வேண்டும். இதனை பின்பற்றாத நிறுவனங்கள்மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் கரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை, படுக்கை வசதி உள்ளிட்ட தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு (8056931110, 8754731110, 8220671110, 8870361110, 8220791110, 8870541110) தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT