தேனி-போடி நெடுஞ்சாலையில் கோடாங்கிபட்டி எனும் இடத்தில் திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையாத நிலையில் பல வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
பயன்பாட்டுக்கு வராத புற வழிச் சாலையில் இருந்து அதிவேகமாக வரும் வாகனங்கள் போடி வழித்தடத்தில் செல்லும் வாகனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் நேற்று கார்-ஜீப், டூவீலர்கள் என அடுத்தடுத்து மூன்று விபத்துக்கள் ஏற்பட்டன. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து புறவழிச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மணல் குவிக்கப்பட்டு தடுப்பு வைக்கப்பட்டது.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், புறவழிச்சாலையில் சாலை அமைப்புப் பணிக்காக மணல், ஜல்லி லாரிகள் மட்டுமே செல்கின்றன. இந்த பாதையை பிற வாகனங்களும் பயன்படுத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.