பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக, அரசு செட்டாப் பாக்ஸ்களை அகற்றினால், கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, 200-க்கும் மேற்பட்ட சேனல்களை பொதுமக்களுக்கு ரூ.140 (ஜிஎஸ்டி தனி) என்ற குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.
அரசு செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, குடிபெயர்ந்து சென்றாலோ அதனை பொதுமக்கள் கேபிள் ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசு செட்டாப் பாக்ஸ்களை, பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக கேபிள் ஆபரேட்டர்கள் மாற்றினால், உடனடியாக 0424 2262573 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். ஈரோடு மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள், மூன்று மாதங்களுக்கு மேலாக செயலாக்கம் செய்யாமல் இருக்கும் செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக தனியார் செட்டாப் பாக்ஸ் பொருத்தி கேபிள் இணைப்பு வழங்குதல், அரசு கேபிள் இணைப்பு குறித்து தவறான தகவல்களைப் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபடும் ஆபரேட்டர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கெனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு சந்தா தொகையை நிலுவை வைத்திருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், உடனடியாக அரசுக்கு செலுத்திட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.