சேலம் அடுத்த ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். உடன் எம்பி பார்த்திபன், டிஎஸ்பி சங்கீதா உள்ளிட்டோர். 
Regional01

ஓமலூர், காடையாம்பட்டி பகுதி - கோயில் அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை வழங்கல் :

செய்திப்பிரிவு

சேலம் அடுத்த ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.4 ஆயிரம் கரோனா உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆட்சியர் கார்மேகம், எம்பி பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர். நிகழ்ச்சிக்கு பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நிலையான மாத சம்பளமின்றி பணிபுரியும் 363 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது, ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 64 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மேட்டூர் துணை ஆட்சியர் (பொ) வேடியப்பன், டிஎஸ்பி சங்கீதா, வட்டாட்சியர் அருள் பிரகாஷ், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி, ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் (பொ) அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT