தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் மழை, வெள்ளம், புயல், இடி மற்றும் மின்னல் உள்ளிட்ட பேரிடர்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள முன்னெச்சரிக்கை செயலியான TNSMART App மற்றும் மின்னல் முன்னெச்சரிக்கை செயலியான DAMINI Mobile App ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
நீர்நிலைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்ட ஆறுகள், கால்வாய்களை தூர் வாரி நீர்வழிப்பாதை உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கழிவுநீர் பாதைகளை சீர் செய்ய வேண்டும்.
தற்காலிக நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மீட்பு பணிகளுக்கு தேவையான பொக்லைன், மர அறுவை இயந்தி ரங்கள், வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தேவையான அளவு வைத்திருக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.இதில் எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வன அலுவலர் பிரபு, டிஆர்ஓ., சதீஷ், திட்ட இயக்குநர் பெரியசாமி, ஆட்சியர் நேர்முக உதவியாளர் முருகன், பேரிடர் மேலாண்மை பிரிவு வட்டாட்சியர் குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.