Regional01

தமிழகத்தில் முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் - காணொலி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் : 51 பேர் பங்கேற்று, ஆட்சியரிடம் குறைகளை தெரிவித்தனர்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் 51 பேர் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழகத்தில் முதல் முறையாக காணொலிக் காட்சி வாயிலான மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்பதற்காக பிரத்யேக செயலி வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் காணொலி வாயிலாக பங்கேற்ற பொதுமக்கள் பட்டா மாறுதல், சாக்கடை கால்வாய் தூர் வாரப்படாதது, சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அவற்றைக் கேட்டுக்கொண்ட ஆட்சியர், பொதுமக்களின் பெயர், செல்போன் எண் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொண்டு, அவர்களின் குறைகளைப் போக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணிவரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் 51 பேர் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் ஆட்சியர் த.பிரபுசங்கர் கூறியது: வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மாதந்தோறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடைபெறுவது வழக்கம். இவற்றுக்கு பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், தங்களின் குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதன் மூலம் 15 நிமிடங்களில் 10-க்கும் மேற்பட்ட மனுதாரர்களை சந்திக்க முடிகிறது. அனைவரின் குறைகளையும் போக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார்.

SCROLL FOR NEXT