இலங்கைக்கு அம்பர் கிரிஸை கடத்த முயன்ற போது பிடிபட்டவர்கள். 
Regional02

திருச்செந்தூரிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற - ரூ.2 கோடி மதிப்புள்ள அம்பர் கிரிஸ் பறிமுதல், 6 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருச்செந்தூரிலிருந்து இலங்கை க்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ அம்பர் கிரிஸை போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர் பகுதியிலிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒரு பொருளை சிலர் கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில், தாலுகா இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில், எஸ்ஐ சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீஸார் வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அதிலிருந்தவர்கள் மெழுகு போன்ற பொருளை பையில் மறைந்து வைத்திருப்பது தெரியவந்தது. . விசாரணையில் அது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர் கிரிஸ் என்பதும், வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான அதற்கு சர்வதேச சந்தையில் கோடிக் கணக்கில் மதிப்புள்ளதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக காரில் வந்த 6 பேரிடம் விசாரித்ததில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பாளையம்பட்டி இளங்கோவன்(52), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செங்குளம் வாமபுரம் ராம்குமார்(27), நாகப்பட்டினம் ஆலியூர் முஹம்மது அஸ்லம்(33), திருச்சி அரியமங்கலம் ராஜா முஹம்மது(34), தஞ்சாவூர் யாகப்பநகர் வெங்கடேஷ்(48), அதே ஊர் புதுக்கோட்டை ரோட்டை சேர்ந்த ஜான் பிரிட்டோ(48) என்பது தெரிய வந்தது.

2 கிலோ எடையுள்ள அம்பர் கிரிஸை அவர்கள் இலங்கைக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து இந்தோனேசியா, இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

அம்பர் கிரிஸை பறிமுதல் செய்த போலீஸார் 6 பேரையும் காருடன் திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரனிடம் ஒப்படைந்தனர். தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காரை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் கூறும்போது, ‘‘அம்பர் கிரிஸ் 1972-ம் ஆண்டு வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருளாகும். அம்பர் கிரிஸை எங்கிருந்து எடுத்தார்கள் என்பது குறித்து 6 பேரிடமும் விசாரணை நடத்தப்படும். ஹைதரபாத்தில் உள்ள நிறுவனத்துக்கு அது பரிசோதனைக்கு அனுப்பப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT