மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களை ஜாதி ரீதியாக பிரித்து கூலி வழங்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியத் தலைவர் பழனி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஜாதி ரீதியாக கூலி வழங்க உத்தரவிட்ட மத்திய அரசை கண்டித்தும், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும், ஒரு நாளைக்கு ரூ.600 கூலி வழங்க வேண்டும், தாமதம் இல்லாமல் கூலியை வழங்க வேண்டும்” என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.
இதில் மாநில துணை பொதுச் செயலாளர் செல்வன், மாவட்டப் பொருளாளர் ராமதாஸ், ஒன்றியச் செயலாளர் குப்புசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகலாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி வசந்தகுமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வீரபத்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.