காட்டுமன்னார்கோவில் பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கிய 3 மருந்து கடைகளை மூடினர்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில், துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் செந்தில்குமார், சிதம்பரம் சரக மருந்துகள் ஆய்வாளர் கதிரவன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று காட்டுமன்னார்கோவில் வட்டப்பகுதியில் உள்ள மருந்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் ஸ்டிராய்டு மருந்துகள், வலி நிவாரணி மருந்துகள், அன்டிபயோட்டிக் போன்ற அட்டவணை மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், விற்பனை ரசீது வழங்காமல் காட்டுமன்னார்கோவில், மோவூர், ஓமாம்புலியூர் பகுதிகளில் 3 கடைகள் வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிதம்பரம் சரக மருந்துகள் ஆய்வாளர் கதிரவன், விழுப்புரம் உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் ரவிக்குமாரிடம் (பொறுப்பு) அறிக்கை அளித்தார் இதன் பேரில் மூன்று மருந்து கடைகளின் உரிமம், மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்ட விதிகளின் படி தற்காலிகமாக 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு மூட உத்தரவிட்டார். அதன்படி 3 கடைகளும் மூடப்பட்டன.