கடலூரில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் வேளாண் துறை மூலம் கடலூர் வட்டாரத்தில் உள்ள 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்கு தொகுப்பு நிதியாக, ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குநர் (மாநில திட்டம்) ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஐயப்பன் எம்எல்ஏ. கலந்துகொண்டு கடலூர் வட்டாரத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான 2 நெல் நடவு இயந்திரங்கள், ஒரு வைக்கோல் கட்டும் இயந்திரம், 4 பவர் டில்லர்கள், 11 ரொட்டவேட்டர்களும் வழங்கினார். கடலூர் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சுரேஷ் ராஜா, வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.