Regional02

உளுந்தூர்பேட்டை அருகே - தீண்டாமை தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை அருகே தீண்டாமை தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உளுந்தூர்பேட்டை அடுத்த கோவிந்தராசுபட்டணத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் பொதுவழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மூங்கில் கூடைப் பின்னும் தொழில் செய்துவரும் ராமதாஸ் என்பவருக்கும் இடையே பாதை ஆக்கிரமிப்புத் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராமதாஸ் மற்றும் அவரது உறவினர்களான நதியா, குமார், கண்ணன் உள்ளிட்டோர் தங்களது வீட்டிற்குச் சென்றனர்.

அப்போது, அவர்களை வழிமறித்த நாராயணன் மகன் அய்யனார், கலியபெருமாள் மகன் அய்யனார், சிங்காரவேலு, வீரப்பன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராமதாஸ் உள்ளிட்டோர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து ராமதாஸ் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த திருநாவலூர் போலீஸார், நாராயணன் மகன் அய்யனார் மற்றும் சிங்காரவேலு ஆகிய இருவரை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT