வைகுண்டம் வட்டம் புன்னக்காயலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.46.14 கோடியிலும், ஆழ்வார்திருநகரி பகுதியில் ரூ.25.14 கோடியிலும் தடுப்பணை கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தடுப்பணை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘‘புன்னக்காயல், சேர்ந்தமங்கலம், முக்காணி கிராமங்களுக்கு குறுக்கே தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் 717 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரத்தில் கடைமடை தடுப்பணை கட்டப்படுகிறது. இதன் மூலம் கடல் நீர் உட்புகாமல் நிரந்தரமாக தடுக்கப்படும். இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் செறிவூட்டம் செய்யப்பட்டு கிணற்றடி நீர் உயர்ந்திடும்.
இதுபோல் ஆழ்வார்திருநகரி மற்றும் ஆழ்வார்தோப்பு கிராமங்களுக்கு இடையே 440 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆழ்வார்திருநகரி பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று கிணறுகளுக்கு தேவையான நீர் கிடைப்பதுடன் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இப்பகுதியில் உள்ள 1,522 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், கோட்டாட்சியர் கோகிலா, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காலான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் ரூ.12 லட்சம் மதிப்பிலும், சீர்காட்சி கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பிலும் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமானப் பணிகளையும் அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.