தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 2,480 கிலோ மஞ்சள் மற்றும் பைபர் படகு, சுமை ஆட்டோ, 3 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
காயல்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திரா, எஸ்ஐ அமலேற்பவம் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு காயல்பட்டினத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது, நள்ளிரவில் காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகில் மூட்டைகளை 5 பேர் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீஸார் வருவதை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். பதிவெண் இல்லாத அந்த பைபர் படகில் 32 மூட்டை விரலி மஞ்சளும், கடற்கரை பகுதியில் நின்ற சுமை ஆட்டோவில் 40 மூட்டை விரலி மஞ்சளும் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 72 மூடைகளில் இருந்த 2,480 கிலோ மஞ்சளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு, சுமை ஆட்டோ, 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இலங்கைக்கு மஞ்சளை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் மற்றும் காயல்பட்டினம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.